சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினர் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல் துறையினர் தாக்குதல் நடத்தி கைது செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து தகவல் பரவியதும், தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம்., உக்கடம் பகுதிகளில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சென்னை காவல் துறையின் அடக்குமுறையைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டம் காரணமாக பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகள் முற்றிலும் முடங்கியது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.
மேலும், பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான காவல் துறையினர் ஆத்துப்பாலம் பகுதியில் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், இஸ்லாமியர்கள் அறவழியில் போராட்டம் நடத்தும்போது, தாக்குதல் நடத்திய காவல் துறையினரைப் பணி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டம் கைவிடப்படாது என்றனர்.
இதேபோல் பொள்ளாச்சி காந்தி சாலை முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனால் பாலக்காடு சாலை, கோவை சாலை, உடுமலை சாலை, வால்பாறை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இரண்டு மணி நேரம் வரை வாகன நெறிசல் ஏற்ப்பட்டது
மறியலில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் சமாதானப்படுத்தியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: 'ரஜினிக்கு செல்வாக்கு இருப்பதால் விமர்சனத்திற்கு ஆளாகிறார்' - செ.கு. தமிழரசன்