கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து கடந்த (ஆக.2) ஆம் தேதி சென்னை வந்தார். சட்ட பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பட திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
அதன் பின் உதகை சென்று, குன்னூர் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு இரண்டு நாள்கள் அங்கு தங்கி பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார்.
பயணம் நிறைவு
இதனைத் தொடர்ந்து இன்று (ஆக.6) சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் மூலம் சூலூர் விமானப்படை வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் மோசமான வானிலை காரணமாக கார் மூலம் உதகையில் இருந்து கோத்தகிரி, மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி வழியாக சூலூர் விமான நிலையம் வந்தடைந்தார்.
தமிழ்நாடு அமைச்சர்கள்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன், முத்துசமி, மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை வழி அனுப்பி வைத்தனர்.
முன்னதாக சாலை மார்க்கமாக குடியரசு தலைவர் வந்ததால் 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு வந்தடைந்தார் குடியரசுத் தலைவர்- வரவேற்றார் முதலமைச்சர்