நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், பொருளாதார ரீதியாக ஏழை-எளிய நடுத்தர வர்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய இணையமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் ஆன்லைன் மூலம் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர், "கரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை வீட்டில் இருந்தபடி ஆதரவு அளித்த அனைத்து மக்களுக்கும் பாராட்டுகளை பாஜக தெரிவித்துக் கொள்கிறது.
பாஜக தொண்டர்களின் உழைப்பினாலும் பாஜகவின் முயற்சியினாலும் இந்தியா முழுவதும் ஒன்பது லட்சம் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள், 12 லட்சம் முகக்கவசங்கள் (மாஸ்க்), 12 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உதவிகள் என நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பட்டுள்ளனர்.
பிரதமர் கேர் (pmcare) மூலம் 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஆரோகியத்திற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய செயலியை மக்கள் பலரும் உபயோகிக்க தொடங்கிவுள்ளனர்.
கரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். காவலர்களும், தூய்மை பணியாளர்களும் சிறப்பான முறையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பாஜக சார்பில் பெரும் நன்றிகள்.
பிரதமர் கூறும் அறிவுரைகளை கேட்டு முறையாக செயல்பட்டால் கரோனா வைரஸை முற்றிலும் அகற்ற முடியும். தற்போது உள்ள சூழ்நிலையில் எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சியினரை குறை கூறுவதையோ கண்டனம் தெரிவிப்பதையோ தவிர்த்து விட வேண்டும்.
கண்டனம் தெரிவிக்க இது உரிய காலம் இல்லை. தேர்தல் வரும்போது அவரவர்கள் கண்டனங்களை மக்களிடம் கூறலாம்" என்று தெரிவித்தார். இதில் பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசனும் கலந்துக்கொண்டார்.
இதையும் பார்க்க: நோய் கண்டறியும் உபகரண தயாரிப்பு மே மாதம் தொடங்கும் - மத்திய அமைச்சர்