பொள்ளாச்சி பகுதியில் உள்ள அர்த்தனாரி பாளையத்தில் கடந்த சில மாதங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை அரிசி ராஜா மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் கலீம் என்ற கும்கி யானையின் உதவியோடு லாரியில் ஏற்றப்பட்டு, டாப்சிலிப் வரகளியாறு வனப்பகுதியில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. அரிசி ராஜாவுக்கு பயிற்சி அளிப்பதற்காக மூன்று யானை பாகன்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும், மாரியப்பன், ராமு ஆகிய கும்கி யானைகளும் வரகளியாறு பகுதியில் கொண்டு வரப்பட்டன.
தொடர்ந்து, கால்நடைத் துறை மருத்துவர் சுகுமார் அப்பகுதிக்கு சென்று அரிசி ராஜாவின் நிலைகுறித்து அறிந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அரிசி ராஜாவுக்கு வனத்துறையினர் முத்து என பெயர் சூட்டியுள்ளனர். மற்ற வளர்ப்பு யானைகள் போல் முத்துவும் கரும்பு ,தேங்காய், ராகி, களி, உருண்டை என வனப்பகுதியில் உள்ள இலைகள் போன்றவற்றை உட்கொண்டு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மேலும் தற்போது யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறுவதால் முத்துவும் வரகளியர் பகுதியில் புத்துணர்வு முகாமில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, சின்னதம்பி ஒரு வருடம் கரோலில் அடைக்கப்பட்டு தீவிர பயிற்சிக்கு பின் பொங்கல் திருவிழா, புத்துணர்வு முகாமில் கலந்துகொண்டதுபோல் முத்துவும்அடுத்த வருடம் கலந்துகொள்ளும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்க:கோவையில் கும்கி யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு முகாம் தொடங்கியது