கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி தாமரைக்குளம் பகுதியில் விஜயகுமார் என்பவர் கோழிக்கடை நடத்திவருகிறார். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.
சில தினங்களுக்கு முன் ஜெயப்பிரகாஷிடம் 10 ஆயிரம் ரூபாயை விஜயகுமார் கொடுத்தார். பின்னர் ஜெயப்பிரகாஷ் மனைவியிடம் 1,000 ரூபாயை விஜயகுமார் கொடுத்தார். இந்நிலையில் விஜயகுமாரிடம் மீதிப் பணத்தை ஜெயப்பிரகாஷ் கேட்டு அடித்துக் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால் விஜயகுமார் மனவேதனையில் இருந்தார். இதனிடையே இன்று (மார்ச் 2) இருவரும் தேநீர்க் கடையில் சந்தித்தபோதும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது விஜயகுமார் அவரது வாகனத்தில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
உடனே தேநீர்க் கடைக்காரர் விஜயகுமார் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இதனிடையே ஜெயப்பிரகாஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் விஜயகுமாரை மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மேலும் தப்பியோடிய ஜெயப்பிரகாஷை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். பொள்ளாச்சியில் முதல் முறையாக கந்துவட்டியால் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சிசெய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் கந்துவட்டி கொடுமையால் தொடரும் உயிரிழப்புகள்!