கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வேட்டைக்காரன் புதூரில் சவுத் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. அதே வளாகத்தில் ஏடிஎம் ஒன்றும் இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று (பிப்.18) நள்ளிரவில் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல், கேஸ் கட்டிங் இயந்திரத்தைக் கொண்டு பணம் வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது, திடீரென தீப்பிடித்ததால் கொள்ளை கும்பல் தாங்கள் கொண்டு வந்த பொருள்களை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளது. ஏடிஎம் இயந்திரம் தீபிடிப்பதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக அதனை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆனைமலை காவல் துறையினர் வங்கி அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். வங்கி அலுவலர்கள் வந்து பார்த்தபோது ஏடிஎம் இயந்திரம் முழுவதும் எரிந்து நாசமானது. அதிலிருந்த பணமும் முற்றிலும் எரிந்து சேதமானது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஏடிஎம் மையத்திலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த ஏடிஎம்-ல் இதற்கு முன்பு பலமுறை கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏடிஎம் மையத்திற்கு இரவு காவலாளி நியமிக்காததே இத்தகைய செயலுக்கு காரணம் என வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் நூதனத் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது!