கோயம்புத்தூர்: கோவையில் இயங்கிய வரும் பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில், சுமார் 200 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளானர். இதனையடுத்து குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய விஜயகுமார் என்பவரின் புகைப்படத்தை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இவர் தருமபுரி மாவட்டத்தில் வேறொரு வழக்கில் கைதான போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என தெரிவிக்கபட்டுள்ளது.
கொள்ளைச் சம்பவம்: கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நான்கு தளங்கள் கொண்ட இந்தக் கடையில் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த நவ.27-ஆம் தேதி இரவு வழக்கம் போல ஊழியர்கள் கடையை பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து, நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வென்டிலேட்டரைக் கழற்றி, அதன் வழியே கடைக்குள் புகுந்துள்ளனர்.
பின்னர் முதல் மாடி மற்றும் இரண்டாவது மாடிக்குள் இறங்கி, அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான கிலோ கணக்கு தங்க நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்றைய முன்தினம் (நவ.28) கடையைத் திறந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த ஊழியர்கள், ஏசி வெண்டிலேட்டர் கழட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், மர்ம நபர்கள் அதன் வழியே புகுந்து, தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றிருப்பதை உணர்ந்து, உடனடியாக இது குறித்து கடை மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அவர் உடனடியாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, போகாந்திபுரம் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் வைரம், தங்கம் நகைகள் சுமார் 200 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தனிப்படை போலீசார் தீவிரம்: இந்நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட நபரின் செல்போன் சிக்னல் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் ஸ்விட்ச் ஆப் ஆனதாக கண்டறியப்பட்ட நிலையில், நேற்று (நவ.29) இரவில் இருந்து தனிப்படையில் ஒரு குழு ஆனைமலையில் முகாமிட்டுள்ளது.
மேலும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் என போலீசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், ஒரு தனிப்படைக் குழுவினர் தருமபுரிக்கு விரைந்துள்ளனர். இந்நிலையில்தான் குற்றவாளியின் புகைப்படத்தை காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது ஏன்? - ஓய்வு பெற்ற டிஜிபி பி.கே.ரவி அளித்த விளக்கம்!