கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரின் கார் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து ஹரிஷ் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் சதி வேலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தன்னுடைய நன்பர் ஹரிஹரனுடன் இணைந்து காரை சேதப்படுத்தியது தெரிய வந்தது. கடந்த விநாயகர் சதுர்த்தியின்போது சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக காரை சேதப்படுத்தியதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் செல்வனும் அதே அமைப்பில் இருந்து வருகிறார். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் தமிழ்நாட்டில் நுழைந்த ஈரானிய கொள்ளையர்கள்