கோவை மாவட்டம் சூலூர் முதலிபாளையம் குப்பாந்தோட்டம் பகுதியில் வசித்துவருபவர் கிருஷ்ணசாமி. விவசாயியான இவர், சமூக செயற்பாட்டாளராகவும் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலராகவும் உள்ளார்.
இதுவரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களைப் பெற்றுள்ளார். அதுபோல 2017ஆம் ஆண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது சூலூர் குரும்பபாளையம் பகுதியில் உள்ள 3.5 ஏக்கர் நிலம் இலவசப்பட்டா வழங்கியது குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார்.
இதன்பின்பு பெற்ற தகவலின் அடிப்படையில் அந்தப் பட்டா சர்ச்சைக்குள்ளான பட்டா என மாவட்ட நிர்வாகத்தில் புகாரளித்திருந்தார். இந்தச்சூழலில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் கிருஷ்ணசாமியின் தோட்டத்திற்கு வந்த காவலர்கள் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
காலையில் வருவதாகக் கூறிய கிருஷ்ணசாமியை காவலர்கள் வலுக்கட்டாயமாக காவல் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதுபற்றி சூலூர் காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் விசாரித்தபோது, "பட்டா வாங்கித்தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றியதாகக் குரும்பபாளையத்தில் உள்ள சிலர் புகாரளித்துள்ளனர். அதனடிப்படையில்தான் அவரை கைது செய்துள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேட்டைத் தட்டிக்கேட்ட சமூக செயற்பாட்டாளர் கிருஷ்ணசாமி மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: குழந்தைகளைப் பலிகேட்கும் ஆழ்துளைக் கிணறு! -இதுவரை...