கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் 2016ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதில், மாவோயிஸ்ட்களில் ஒருவரான வீரமணி கோவை மத்திய சிறையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தற்போது, அவர் தனது மனைவியுடன் உக்கடம் பகுதியில் வசித்துவருகிறார். இந்நிலையில், தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்துவரும் அவரை காலிசெய்ய வைக்குமாறு வீட்டின் உரிமையாளரை காவல் துறையினர் நிர்பந்திப்பதாகவும், தொடர்ந்து காவல் துறையினர் எங்களை கண்காணித்துவருவதுடன் அடக்குமுறைச் செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறி கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, காவல் துறையினரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜனநாயக ரீதியாக இங்கு ஆட்சி நடக்கிறதென்றால் எனக்கு நீதி வழங்குங்கள்.
கடந்த மூன்று மாதமாக தவறாமல் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டுவருகிறேன். என் மீது காவல் துறை கொடூரமான அடக்குமுறையை செலுத்துகிறது. இதனை சட்டரீதியாக அணுகி எனக்கான நீதியை கோர வந்துள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்: மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கலாம்