கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் ஷோபனா (25). இவர் பாப்பப்பட்டி பிரிவில் உள்ள பியூட்டி பார்லரில் பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்ற அவர், மாலை வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் பியூட்டி பார்லருக்கு அலைப்பேசி வாயிலாக தொடர்புகொண்டும் யாரும் அலைபேசியை எடுக்கவில்லை.
சிறிது நேரம் ஆன பிறகு, பியூட்டி பார்லரிலிருந்து அழைத்து, ’ஷோபனா அறையில் சென்று தாழிட்டு கொண்டதாகவும், உடனடியாக வருமாறு’ அவரது பெற்றோருக்கு இரவு 7.30 மணிக்கு கூறியுள்ளனர். இதையடுத்து, அவரது உறவினர்கள் வருவதற்கு முன்னதாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தூக்கிட்ட நிலையில் இருந்த ஷோபனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பியூட்டி பார்லரில், ஷோபனா தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார். அவர் கொலை செய்யப்பட்டிருப்பார் எனவும் அவரது உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், பியூட்டி பார்லரின் உரிமையாளர் தற்கொலை என புகார் கொடுத்திருப்பதை காவல்துறையினர் எந்தவித விசாரணையுமின்றி ஏற்றுக்கொண்டதாக கூறி ஷோபானாவின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட எதையும் ஆராயாமல் கொலையை தற்கொலையாக மாற்ற சூலூர் காவல் துறையினர் முயற்சிப்பதாக சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினார். ரேஸ் கோர்ஸ் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வாரத்தை நடத்தியும், கலையாததால் அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சித்தனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட ஷோபனாவின் உறவினர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.