கோயம்புத்தூர்: ராஜ வீதி அடுத்த சண்முகா நகர் பகுதியில் ’மோகன் டை’ என்ற பெயரில் மோகன் குமார்(45) தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த 12 வருடங்களுக்கு மேலாகத் தங்க நகை கடைகளுக்கு மொத்த வியாபாரமாகத் தங்க நகைகள் செய்து கொடுத்து வருகிறார். இவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் வித்தால் போச்லே (20) என்பவர் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் காலை 8.30 மணியளவில் பிரமோத் வித்தால் போச்லே மற்ற ஊழியர்களும் உரிமையாளரும் பட்டறைக்கு வரும் முன்பு, பட்டறையின் சாவியை எடுத்து கடையில் இருந்த 1 கிலோ அளவிலான தங்க நகை மற்றும் கட்டிகளைத் திருடிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
கடையின் சாவியை வைக்கும் இடத்தையும், கடை திறக்கும் நேரத்தையும் நன்கு தெரிந்துகொண்டு இவர் திருடிச்சென்றுள்ளார். இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் மோகன் குமார் அளித்த புகாரில் 50 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 1067.850 கிராம் தங்க நகைகள் திருடுபோனதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் நகையைத் திருடியவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நகை திருடிக்கொண்டு சொந்த ஊர் சென்றிருப்பாரா? நகையை வேறு யாரிடமாவது விற்பனை செய்ய முயல்கிறாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உணவுப்பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறிக்கமுயன்ற நபர்