கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தொடர் போராட்டத்தை அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, சென்னையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மனுவளிக்கும் போராட்டத்தை பாமகவினர் அறிவித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று (டிச.30) கோயம்புத்தூரில், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தலைமையில் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 20க்கும் மேற்பட்டோர், வன்னியர் சமுதாயத்திற்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பியவாறு வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர், பாமக ஊடக பேரவை தலைமைக் குழு தமிழ்வாணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தமிழ்நாடு அரசு உடனடியாக எங்களது மனுவை பரிசீலனை செய்து, அதனை நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கையானது வன்னியர்களுக்கு மட்டும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியினருக்கும் அவரவர் சாதியின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடுகளை அரசு தர வேண்டும்” என்று தெரிவித்தார்.
அதுபோல, தருமபுரியிலும் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு தர வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் பெரியார் சிலை இருந்து ஊர்வலமாக சென்று, தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் மரு.செந்தில். பாரிமோகன் உள்ளிட்ட சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
மேலும் திருவாரூரிலும் இப்போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாமக மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணி அய்யர் தலைமையில், பேரணியாக புறப்பட்டு பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் வழியாக திருத்துறைப் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வன்னியர்களுக்கான 20 விழுக்காடு ஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். இதில், பாமக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மோடியின் புகைப்படத்துடன் பாஜக ஊர்வலம்: தடுத்து நிறுத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது புகார்!