கோவை: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, முதல்வரின் காப்பீட்டு திட்ட வார்டு உள்ளிட்ட மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளில் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் பற்றியும் தேவையான வசதிகள் குறித்தும் கலந்தாலோசித்தார்.
![மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கோவை மருத்துவமனையில் திடீர் ஆய்வு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-03-ma-subramaniyan-script-7208104_01042023220950_0104f_1680367190_1057.jpg)
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் தற்போது கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது உலக அளவில் ஒரு நாளைய கரோனா தொற்று 3 ஆயிரம் பேருக்கும், அண்டை மாநிலமான கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 765 பேருக்கும், தமிழகத்தில் நேற்று முன்தினம் 139 பேருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, கோவையில் 14 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தற்போது பரவி வரும் BA 2 XBB உருமாறிய வைரஸ் கரோனா தொற்று பாதிப்பு குறைவாக இருக்கும் ஆற்றல் உடையது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தொற்று குறைவாக இருப்பதாகவும், இறப்பே இல்லாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கரோனா பரவல் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் போதிய அளவிற்கு தயாராக உள்ளது. தடுப்பூசி மருந்துகளும் போதுமான அளவில் உள்ளன. மருத்துவமனைகள் மூலம் கரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே, முதற்கட்டமாக ஏப்ரல் 1 முதல் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள், நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
![மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கோவை மருத்துவமனையில் திடீர் ஆய்வு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-03-ma-subramaniyan-script-7208104_01042023220950_0104f_1680367190_653.jpg)
இது குறித்து மருத்துவமனைகளில் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்று கூறினார். மேலும், அதன் முன்னோட்டமாக தான் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதாகவும், ஒன்றிய அரசு தற்போது தடுப்பூசி மருந்து உற்பத்தியை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை பொறுத்தவரை ஒரு நாளைக்கு ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களுக்கு 20 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தேவைப்படும் நிலையில், தற்போது ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதாகவும், அதனையும் நிரப்ப விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இம்மருத்துவமனையில் சிடி ஸ்கேன் இயந்திரம் வழங்கப்பட்டு கடந்த இரு மாதங்களில் 283 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்றும் மருத்துவர்களின் கோரிக்கையான ரேடியோலாஜிஸ்ட், நியூராலஜிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர் அதிரடி கைது!