ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 40 நாள்களாக இந்தியாவில் மது விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் மது அருந்த முடியாமல் திண்டாடி வந்தனர். இதையடுத்து தமிழ்நாட்டில், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்குள் வரும் பகுதிகள் தவிர, பிற பகுதிகளில் இயங்கிவரும் மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
அதேபோல் வயது வாரியாகப் பிரித்து மதுபானம் வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் பல்வேறு இடங்களில் மதுபானம் வாங்க மதுப்பிரியர்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் கோவை மாவட்டம் வாகராயம்பாளையத்தை அடுத்த கிட்டாம்பாளையம் பகுதியில் உள்ள மதுக்கடையில் காலை 6 மணி முதல் மதுப்பிரியர்கள் குவிந்தனர். கையில் குடை, தண்ணீர் பாட்டில் என முன்னேற்பாடுடன் வந்து வரிசையில் இடம்பிடித்து நின்றுள்ளனர். அரசு அறிவுறுத்தியது போல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசங்கள் அணிந்து வரிசையில் நின்றனர்.
ஒரு சிலர் காலை உணவுடன் வந்து வரிசையில் மதுபானம் வாங்க காத்திருந்தனர். இதுகுறித்து மதுப்பிரியர்கள், “கடந்த நாற்பது நாள்களுக்கு மேலாக மது அருந்தாமல் இருந்தோம். தற்போது கடை திறக்கப்படுவதால் காலையில் நேரமாகவே வந்து மதுபானம் வாங்குவதற்காக காத்திருக்கிறோம் ” என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க: மதுபான கடைகள் திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்