பொள்ளாச்சி அருகே உள்ள சோமந்துரை கிராமத்தில் இரு தரப்பினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு ஏற்பட்ட மோதல் தீவிரம் அடைந்துள்ளது.
இரு தரப்பு இளைஞர்களிடை ஏற்பட்ட மோதல் காரணமாக, ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மற்றவர் வீடுகளில் கல் எறிந்தும், பாட்டில்களை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், ரகளையில் ஈடுபட்ட இருதரப்பு இளைஞர்கள் உட்பட சிலரை கைது செய்து கோட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, குடிபோதையில் அவ்வப்போது ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் பிடித்து வைத்துள்ள இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதி பதட்டமாக காணப்படுகிறது. மீண்டும் மோதல் ஏற்பட்டுவிடாமல் தடுக்க சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.