கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம் ராதாகிருஷ்ணன் வீதியில் உள்ள சமுதாயக் கூடத்திற்கு அருகில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் உயர் மின் கோபுரத்தை அமைக்கவிருக்கிறது.
மேலும், பொதுமக்கள் வசிக்கக்கூடிய வீடுகளும் அருகில் உள்ளதால், அங்கு வசிக்கக்கூடிய குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அரசு உத்தரவின் படி குடியிருப்புப் பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் தான் உயர் மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் அமையவிருக்கும் உயர் மின் கோபுரமானது வீடுகளின் மிக அருகிலேயே போடப்பட்டுள்ளது. இதனால் வீட்டின் சுவர் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள்; 'இந்த உயர் மின் கோபுரத்தால் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலிருந்து வரும் கதிர் வீச்சால் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள்.
இது போன்று, ஏற்கெனவே அப்பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு பொது மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது புதிதாக ஒன்று அமைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
எனவே, மாவட்ட ஆட்சியர் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். உள்ளாட்சித் தேர்தலை அறிவித்ததால் மாவட்ட ஆட்சியர் மனுக்களை நேரடியாக பெற முடியாததால், அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டு அப்பகுதி மக்கள் சென்றனர்.
இதையும் படிங்க: குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!