கோவை: தடாகம் சாலையில் சிவாஜி காலனி முதல் கேஎன்ஜி புதூர் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக தடாகம் சாலையில் குழிகள் தோண்டப்பட்டு பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்த சாலையில் இடையர்பாளையம் அருகே காந்தியடிகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன், குழி தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு இருந்தன. அந்தக் குழிகள் சரியாக மூடப்படாமல் இருந்தநிலையில், அதுகுறித்த அறிவிப்பு போர்டுகளும் வைக்கப்படவில்லை.
இந்நிலையில் அவ்வழியே வந்த தனியார் பேருந்து ஒன்று இன்று எதிர்பாராதவிதமாக அந்தக்குழியில் சிக்கி முன்புறச்சக்கரங்கள் குழிக்குள் புதைந்தன. மேலும் பின் சக்கரங்களும் மேலே தூக்கிய நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் பேருந்தில் இருந்த அனைவரையும் இறக்கிவிட்டு பேருந்தை கிரேன் மூலம் மீட்டனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், 'தடாகம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப்பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
ஏற்கெனவே கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த சாலை மோசமாக இருக்கும் நிலையில், தற்போது குடிநீர் குழாய்ப்பணிகளும் தொடர்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, உடனடியாக இந்த சாலைப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆ.ராசாவுக்கு மிரட்டல்...! கோவை பாஜக மாவட்ட தலைவர் கைது