கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த இந்தப் பகுதியில் தனியார் பால் நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் தேங்குவதாகக் கூறப்படுகிறது.
இதனால் கொசு மற்றும் விஷப் பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்த நிறுவனத்தின் அலட்சிய போக்கால் கடும் தூர்நாற்றம் வீசுகிறது என்றும், இந்தக் கழிவுகளால் தொற்று நோய் ஏற்படுவதாகவும் கூறி அரசு அலுவலர்களுக்கு அப்பகுதியினர் பலமுறை மனு அளித்துள்ளனர்.
ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லாததால் குரும்பபாளையம் ஊராட்சிமன்ற அலுவலகத்தை இன்று (ஜூலை 16) பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ”பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் சூழலில் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டோம்” என்றனர்.
இதையும் படிங்க: ரயில்வே தனியார்மயமாக்கல்: மத்திய அரசைக் கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்