வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதன் பேரில் பெரும்பாலானோர் தலைக்கவசம் அணிந்துவருகின்றனர். இந்நிலையில், 2018ஆம் ஆண்டை விட இந்தாண்டு விபத்து குறைந்துள்ளது என்று அரசிடமிருந்து தகவல் வந்துள்ளது. இருப்பினும் இதன் அவசியம், பாதுகாப்பு பற்றி தெரியாமல் சிலர் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்திற்குள்ளாகின்றனர்.
இதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையைச் சேர்ந்த ஓவியக்கலைஞரான யு.எம்.டி. ராஜா என்பவர் தனது தலைக்கவசத்தில் 12 தேசிய தலைவர்களின் படங்களையும் (மகாத்மா காந்தி, நேரு, சுபாஸ் சந்திர போஸ், அம்பேத்கர், ஆசாத், விவேகானந்தர், பகத் சிங், கோகலே, ரவீந்திரநாத் தாகூர், பாரதியார், ராதா கிருஷ்ணன், ராஜாராம் மோகன்ராய்) தலை காப்போம் என்ற வசனத்தையும் பொறித்து தலையில் அணிந்து சென்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், குடியரசு தினம், சுதந்திர தினம், விழிப்புணர்வுப் பேரணி, ரத்ததான முகாம் போன்ற பல நாட்களில் தனது ஓவியங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.