கோயம்புத்தூர்: கோவையில் இருந்து மதுக்கரை வழியாக கேரளா மாநிலத்திற்குச் செல்ல ஏ மற்றும் பி என இரண்டு ரயில் வழி தடங்கள் உள்ளன. இதில் மதுக்கரை முதல் வாளையார் வரை சுமார் 11 கி.மீ., அடர்ந்த வனப்பகுதி வழியாக இந்த ரயில் பாதை செல்லும். இதனால், வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் ரயில் பாதையைக் கடந்து ஊருக்குள் செல்லும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்த வருவது தொடர்ந்து வருகிறது.
அண்மையில் குட்டியுடன் சென்ற மூன்று யானைகள் ரயில் மோதி உயிரிழந்த நிலையில் யானைகள் ரயில் பாதையைக் கடக்க மாற்று வழியை பின்பற்ற வேண்டுமென சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் மேலும் இது குறித்து ரயில்வே துறைக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டமாக கடிதம் வாயிலாகவும் ஆலோசனைக் கூட்டத்திலும் வலியுறுத்தி வந்தனர்.
இதனை அடுத்து பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் யானைகள் செல்லும் வகையில் எட்டிமடை பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. புதிய பாலம் கட்டப்பட்டுள்ளதால் யானைகள் இதன் வழியாக ரயில் பாதை கடந்து செல்ல வசதியாக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதன்படி மேம்பாலப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று தமிழ்நாடு வனத்துறைச் செயலர் சுப்ரியா சாகூ மற்றும் தமிழ்நாடு வனத்துறை தலைமை வன பாதுகாவலர் சீனிவாச ரெட்டி ஆகியோர் புதிய பாலத்தை ஆய்வு செய்தனர். மேலும், அங்கு அமைக்கப்பட உள்ள தெர்மல் கேமரா பயன்பாடு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மதுக்கரை வாளையார் இடையே நடைபெற்ற ஆறு ரயில் விபத்துகளில் 11 யானைகள் உயிரிழந்த நிலையில் யானைகள் ரயில் பாதையைக் கடந்து செல்ல தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநகரை மிரட்டும் மாடுகள்.. தீர்வு என்ன?