கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள ஜிஆர்டி கல்லூரியில் 3ஆம் ஆண்டு பி.காம் படிக்கும் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சரத்குமார், நஜீம் பாசில், தினேஷ், ஹக்கீம், சுதர்சன், திலீப், பீமா உள்ளிட்ட 8 பேரும் 4 இருசக்கர வாகனங்களில் கடந்த 18ஆம் தேதி ஊட்டிக்கு சென்று விட்டு, மீண்டும் கல்லூரிக்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, அன்னூர் கோவை சாலையில் கடத்தூர் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டு இருந்த பொழுது தினேஷ் டூவீலரை ஓட்ட நஜீம் பாசில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே அசுர வேகத்தில் வந்த லாரி ஒன்று இவர்களது வாகனத்தின் மீது மோதியதில் இருவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அறிந்த அன்னூர் காவல் துறையினர் விரைந்து சென்று இருவரையும் மீட்டு கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேலம் மறஜோதிபட்டியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவரது மகன் தினேஷ் மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் அவரது பெற்றோரின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து அன்னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.