மதுரையில் இலங்கை கடத்தல் மன்னன் அங்கோடா லொக்கா எரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன், லொக்காவின் காதலி அமானி தான்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் டி.எஸ்.பி. பரமசாமி தலைமையில் 10 பேர் கொண்ட குழு மதுரையில் விசாரணை நடத்தியது.
இதில், சிவகாமி சுந்தரி வீட்டில் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அங்கோடா லொக்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மூன்று பேரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் மூன்று பேரையும் ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அளித்த மனுவினை பரிசீலித்த குற்றவியல் தலைமை நீதிபதி ஸ்ரீகுமார் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மூன்று நாள்கள் விசாரணை முடிந்து வருகின்ற 15ஆம் தேதிக்கு முன் மீண்டும் நீதிமன்றத்தில் மூவரையும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'லேப்டாப் இல்லை... போன் இல்லை... டிவி இல்லை... இருந்தாலும் படிக்கிறோம்'