கோயம்புத்தூரில் கடந்த பல நாட்களாக கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. எனவே, அதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களாக டவுசர் கும்பல் என்ற கும்பல் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பங்களில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் அந்த கும்பல் சம்பந்தமான சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. அதில் ஒருவனை நேற்று (ஆகஸ்ட் 8) சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இரவு நேரங்களில் அதிகமாக திருடுவது தெரியவந்தது.
தொடர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு இருப்பதினால் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், தற்போது கூடுதலாக ட்ரோன் கேமராக்களை பறக்க விட காவல்துறையினர் முடிவு செய்தனர். மேலும் இந்த கேமராக்களை திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் இடங்களில் இரவு நேரங்களில் பறக்க விடப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின் பேரில் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இந்த ட்ரோன் கேமரா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, சிங்காநல்லூர் காவல்துறையினர் முதன் முதலில் இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை கோவை மாநகர காவல் ஆணையர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கார் மோதி தூக்கி வீசப்பட்ட தாய், மகன் - சிசிடிவி காட்சி வெளியீடு!