கோவை மாவட்டம், திருமலையம்பாளையம் அருகே உள்ள ரொட்டிகவுண்டன்புதூர் பகுதியில் 'மலசர்' பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகளின்றி அவதிப்படுவது பற்றியும், சங்கவி என்ற பழங்குடியின மாணவிக்குச் சாதி சான்றிதழ் இல்லாததால், மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை குறித்தும், நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தில், கடந்த 11ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இந்தச் செய்தியை அடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி சம்பந்தப்பட்ட பழங்குடியினர் கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மதுக்கரை துணை வட்டாட்சியர் கருணாநிதி தலைமையில், அலுவலர்கள் ரொட்டிகவுண்டன்புதூர் கிராமத்துக்குச் சென்று பழங்குடியின மக்களிடம் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும், அக்கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்குக் குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், ஆதார் போன்றவை பெறுவதற்காக விண்ணப்பங்கள் வழங்கினர். தொடர்ந்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டதோடு, விரைவில் அனைத்தும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் எடுத்த விரைவான நடவடிக்கையால் இன்று மாணவி சங்கவிக்கு சாதிச் சான்றிதழ் கிடைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி உத்தரவின் பேரில், ரொட்டிகவுண்டன்புதூருக்கு வந்த மதுக்கரை வருவாய் வட்டாட்சியர் சரண்யா, மாணவி சங்கவிக்கு நேரில் சாதிச் சான்றிதழை வழங்கினார்.
முன்னதாக, ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியின் வாயிலாக மாணவி சங்கவியின் நிலை குறித்து அறிந்த இந்துஸ்தான் சாரணர், சாரணியர் இயக்கத்தினர், மாணவிக்கு 10 ஆயிரம் ரூபாயை உதவித் தொகையாக வழங்கியதோடு; நீட் பயிற்சி மற்றும் மருத்துவப் படிப்புக்கான செலவையும் ஏற்பதாக உறுதியளித்திருந்தது இங்கே கவனிக்கத்தக்கது.
இது குறித்து மாணவி சங்கவி, 'எங்கள் கிராமம் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதளத்தில் செய்தி வெளியானதால், இந்த உதவிகள் எனக்கு கிடைத்தது. இதற்கு உதவிய ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு நன்றி' என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இதையும் படிங்க : சாதி சான்றிதழ் இல்லாமல் மருத்துவக் கனவை விட்ட மாணவிக்கு கிடைத்த உதவிக்கரம்!