கோவை ஆர்.எஸ் புரம் வெங்கடசாமி சாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ (19) நேற்று மாலை அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக தனியார் நிறுவனம் ஒன்றில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
கரோனா நெருக்கடிக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 13ஆம் தேதியன்று நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளதை உணர்ந்து கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிய அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த மாணவியின் உடல், உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இந்திய மாணவர் பெருமன்றம் (எஸ்.எஃப்.ஐ) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீட் தேர்வை தடைசெய்ய வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியவாறு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
கடந்த 2016ஆம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2019ஆம் ஆண்டு மோனிஷா, ரித்துஸ்ரீ, வைஷியா ஆகிய மாணவிகளும் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.