சீனாவில் தொடங்கிய கரோனா தொற்று தற்போது அந்த நாட்டை விட்டுவிட்டாலும், மற்ற நாடுகளின் கண்ணில் விரல் விட்டு ஆட்டி வருகிறது. இந்தியாவிற்குள் கரோனா பாதிப்பு வருவதற்கு முன்பே பல்வேறு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், நாளாக நாளாக கரோனா தன்னுடைய கிளையை அதிவேகமாகப் பரப்பியது. செய்வதறியாது திகைத்து நாளை 'மக்கள் ஊரடங்கு' உத்தரவை நமது பிரதமர் பிறப்பித்துள்ளார்.
வல்லரசு நாடான அமெரிக்காவே கரோனாவின் கொடூரப் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது. பல்வேறு நாடுகளில் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் மூளையைக் கசக்கிப் பிழிந்து கரோனாவிற்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் அதிதீவிர முயற்சியில் இறங்கினர்.
இருப்பினும் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்க குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது ஆகும் என அவர்களும் கையை விரித்துவிட்டனர். உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்று என்று பெயர் சூட்டப்பட்ட கரோனாவை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த ஒரு மருந்தை யாராவது கண்டுபிடித்துவிட மாட்டார்களா என்ற ஏக்கமே உலக மக்கள் மத்தியில் மிஞ்சியுள்ளது.
அந்த ஏக்கத்தைப் போக்க நம்மூர் விஞ்ஞானிகள் தினம் ஒரு கண்டுபிடிப்பை வாட்ஸ்அப்பில் பார்வேர்டு மெசேஜ்ஜாக அனுப்பிவருகின்றனர். அந்த வகையில் கரோனா என்ற கொடூரக் கிருமியை அடியோடு ஒழிக்க பழைய மெத்தட் (ஆனால் கரோனாவிற்கு இது புதுசுதான்) ஒன்றை கையிலெடுத்துள்ளனர் அரசுப் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும்.
மாஸ்க்கோடு இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜய பாஸ்கர், கரோனாவின் சீரியஸ்னெஸ்ஸை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியதன் விளைவே இந்தக் கண்டுபிடிப்புக்கு உந்துதலாக இருந்திருக்கும் என்கின்றனர் சிலர்.
தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அப்பயணங்களை மக்கள் கட்டாயம் மேற்கொள்வதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இன்னும் சிலர் கூறுகின்றனர்.
அரசாங்கத்திற்கு கிருமிநாசினி தட்டுப்பாடு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், பேருந்து முழுவதும் வேப்பிலை, துளசி ஆகியவற்றைக் கட்டி கரோனாவை லெப்ட் ஹேண்டில் டீல் செய்திருக்கிறார்கள் காந்திபுரம் பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும்.
பேருந்தில் ஏறும் மக்கள் இது பஸ்ஸா இல்லை கோயிலா என வியந்து கேட்கும் அளவிற்கு பேருந்தை வேப்பிலை, துளசி, மஞ்ச தண்ணி என வாரி வாரி இறைத்திருக்கிறார்கள். இவர்களைச் சொல்லி குற்றமில்லை. இதுநாள் வரை பெரியம்மை, சின்னம்மை, காலரா போன்ற உள்ளூர் தொற்று வியாதிகளையே பார்த்து பழகி வந்த நம் மக்களுக்கு சர்வதேச வைரஸ் தொற்றைப் புரிந்துகொள்ள சிறிது காலம் எடுப்பது இயல்பு தான்.
இருப்பினும் வருங்கால சந்ததிகளுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக ஆக்கிவிடாமல் இருப்பதற்காவது இதுபோன்ற ஆபத்தான விபரீத நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்கலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது.
இதையும் படிங்க: கரோனா அச்சம்: சீனர்கள் போன்ற தோற்றமளித்த ஜப்பானியர்களால் பரபரப்பு