கோவை இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் தாக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது காடேஸ்வரா சுப்பிரமணியம் இதனை தெரிவித்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டின் பாதுகாப்பிற்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கும் இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை இந்து முன்னணி கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம். இந்தியாவில் உள்ள எந்த ஒரு இஸ்லாமியர்களுக்கும் பாதிப்பு இல்லை என்று பிரதமர் உள்ளிட்ட நாட்டின் முக்கியத் தலைவர்கள் கூறிவரும் வேளையில் அதனை புரிந்து கொள்ளாமல் இஸ்லாமியர்கள் போராடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ.,-வால் இஸ்லாமியர்களுக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையிலேயே தெரிவித்துள்ள நிலையில் அதனை ஏற்காமல் திக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நக்சல் அமைப்பினர் போன்றவர்கள் இந்தப் போராட்டத்தை அரசியல் லாபத்திற்காக தூண்டி வருகின்றனர்.
சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் தமிழ்நாடு எங்கும் வன்முறை நடத்த தேசவிரோதக் கும்பல் சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள்.
இந்து முன்னணி கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆனந்த், சி.ஏ.ஏ.வை ஆதரித்து பொதுக்கூட்டம் பேசிவிட்டு வீடு திரும்பும்போது கடுமையாக தாக்கப்பட்டு இருக்கின்றார்.
இந்த வன்முறையை நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையை வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் நாளை ஒருநாள் கடையடைப்பு செய்ய உள்ளோம். இதில் பல்வேறு இந்து அமைப்புகள் பங்குபெறும். நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் சி.ஏ.ஏ. ஆதரவு போராட்டத்தை நடத்துவோம்' என தெரிவித்தார்.
இதையும் படிங்க : கோவை மீன் மார்க்கெட்டில் 500 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்!