கோவை: பொள்ளாச்சி அடுத்த சீலக்கப்பட்டி மலையாண்டிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக் என்பவரது மனைவி சீத்தாலட்சுமி. இந்த தம்பதி கடந்த ஒரு மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீத்தாலட்சுமி, கார்த்திக் இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள சுய உதவிக் குழுவில் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளனர்.
இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கடன் தொகையை சரியாக திரும்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சுய உதவிக் குழுவை சேர்ந்தவரும் நல்லாம்பள்ளியைச் சேர்ந்த துளசி மணி அவரது கணவர் மருதமுத்து உள்ளிட்ட சிலர் சீத்தாலட்சுமியிடம் கடன் தொகையைக் கேட்டு மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துளசிமணி மற்றும் சிலர் சேர்ந்து சீத்தாலட்சுமியிடம் பணத்தைக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததுடன் மருதமுத்து, சீத்தாலட்சுமி மற்றும் அவரது தாயார் முருகம்மாள் ஆகியோரை தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டியலின பெண்கள் மீது மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் நடத்திய இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலானது. இதுகுறித்து கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது குறித்து ஈடிவி பாரத் கடந்த மே 22ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த செய்தியின் எதிரொலியாக இவ்விவகாரத்தில் பதில் அளிக்குமாறு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.