கோயம்புத்தூர்: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகிற 27ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். கோயம்புத்தூரில் ஜே.பி. நட்டா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கார் வெடிப்பு நிகழ்ந்த கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலுக்குச் சென்று ஜே.பி.நட்டா வழிபட உள்ளதாகவும் தொடர்ந்து அன்னூர் அருகே உள்ள நல்லிசெட்டிபாளையம் கிராமத்துக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பா.ஜ.க. ஒன்றிய துணைத் தலைவர் மூர்த்தி என்பவரது வீட்டில் ஜே.பி.நட்டா உணவு அருந்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து நல்லிசெட்டிபாளையம் கிராமத்தை, தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கிராமத்தில் குப்பைகளை அகற்றுவது, மின் கம்பங்களில் படர்ந்திருக்கும் செடி கொடிகளை வெட்டி எரிவது உள்ளிட்டப் பணியில் ஊராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே நல்லிசெட்டிபாளையம் கிராமத்திற்கு ஜே.பி. நட்டா வருவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பெரியார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகளுக்கு வர விரும்பும் ஜே.பி. நட்டா, தங்கள் பகுதியில் உள்ள யார் வீட்டிற்கு வேண்டுமானாலும் வந்து உணவு அருந்தலாம் என்றும்; கட்சியினர் வீட்டுக்கு வந்து தங்கள் பகுதி மக்களிடையே பிரச்னையைத் தூண்டும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்கள் கிராமத்தில் எந்த விதமான சுகாதார வசதிகளும் செய்யப்படுவதில்லை என்றும்; தற்போது நட்டா வருவதை அடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் பாஜகவினர் தங்கள் பகுதியில் சகோதரத்துவத்துடன் வசித்து வரும் மக்களிடையே கலகத்தை மூட்டி விட முயற்சிப்பதாகவும், ஜே.பி.நட்டா தனது பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறினர்.
நீலகிரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் காரணங்களுக்காக அருந்ததியர் மக்களின் வீட்டில் சாப்பிட வருவதாக நாடகத்தை பாஜக நடத்த முயற்சிப்பதாக, பெரியார் திராவிடர் கழக பொறுப்பாளர் ராமன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் குடிநீர் தொட்டியில் மலம்.. புதுக்கோட்டையில் பகீர் சம்பவம்