கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் இஸ்ரோ தலைவரும் சந்திரயான் திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்திய விண்வெளி சங்கம் தொடங்கியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.
விண்வெளித் துறையில் அரசுடன் சேர்ந்து தனியார் துறையினரும் பங்கேற்பதின் மூலம் விண்வெளித்துறை நல்ல வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. இந்தியாவில் ஏற்படும் பருவநிலை மாற்றம், தகவல் தொழில் நுட்பம், மீனவர் பாதுகாப்பு போன்றவற்றை கண்டறியும் செயற்கை கோள்களைச் செலுத்தி இந்தியா தன்னிறைவடைந்துள்ளது.
இந்திய விண்வெளி சங்கம் தொடங்கியதற்கு வரவேற்பு
75ஆவது சுதந்திரதினத்தில் இந்திய மாணவர்கள் தயாரித்த 75 செயற்கைக் கோள்களுடன் பிற நாடுகளின் 75 செயற்கைக் கோள்களையும் அனுப்பியது மிகப்பெரிய சாதனையாகும்.
இதுவரை விண்வெளித்துறைக்கு வராத நாடுகளையும் ஒன்றிணைத்து இந்தியா மிகப்பெரிய திட்ட முன்வடிவை மேற்கொள்ளும். இதற்கு தனியார்த்துறை பங்களிப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் ஒவ்வொரு நாடுகளும் தனித்தனியாக செயல்படுவதை விட உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தப் போவது யார்? - நாளை வாக்கு எண்ணிக்கை