கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் நேற்றிரவு(டிச.9) அன்னூர் பேரூராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பங்கேற்று தூய்மை பணியாளர்களுக்கான பேட்டரி வாகனங்களை வழங்கினார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்தார்.
பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தைத் தொடர்ந்து, ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியின்போது பேட்டரி ஆட்டோக்களை ஆ.ராசா வழங்கியபோது, துப்புரவுப் பணியாளர்கள் அந்த வாகனங்களை ஓட்டிச் சென்றனர். அப்போது திடீரென ஒரு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து மக்கள் கூட்டத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.