தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வணிகர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர். அவர்களை காவல் துறையினர் அடித்துக் கொலை செய்ததாகக் கூறி உறவினர்கள், பொதுமக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர். மேலும், இருவரின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் பென்னிக்ஸ், ஜெயராஜின் மரணத்திற்கு நீதி கேட்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், நீதி கேட்கும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், காவல் துறையினரின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையிலும் கோயம்புத்தூரில் வியாபாரிகள் சங்கத்தினர் முழு கடையடைப்பு நடத்தினர்.
தமிழ்நாடு வியாபாரிகள் சம்மேளனம் கடை வீதி கிளை, கோயமுத்தூர் சமையல் எண்ணெய் வியாபாரிகள் சங்கம், டிகே மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட ஆறு சங்கங்கள் இணைந்து இந்த கடையடைப்பை நடத்தின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் கூட்டமாக காணப்படும் தெருக்கள் வெறிச்சோடின.
மேலும், சாத்தான்குளம் காவல் துறையினரின் செயல்பாடுகளைக் கண்டித்து கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் மக்கள் அதிகாரம் அமைப்பினரும், காந்திபுரம் பகுதியில் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: கடலூரில் உதவி ஆய்வாளர் உள்பட மூவர் ஆயுதப்படைக்கு மாற்றம்