கோயம்புத்தூர் மாவட்டம் ராஜவீதி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் சேவை மையத்தின் சார்பில் 'மோடி முகாம்' நடைபெற்றது. பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் கூறியதாவது, ’கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் ஒவ்வொரு வார்டிலும் மோடி முகாம் நடைபெறுகிறது. வரும் 21ஆம் தேதி வரை நடைபெறும். இடையில் ஓரிரு நாட்கள் மட்டும் நடைபெறாது.
இந்த முகாமின் முக்கிய நோக்கம் பிரதமரின் திட்டங்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்ப்பது தான். இதில் ஐந்து லட்சம் வரையிலான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகள் எடுத்து தரப்படுகிறது. ஒன்று முதல் பத்து வயது பெண் குழந்தைகள் இருந்தால் செல்வமகள் திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளலாம். கண், காது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
மாற்றுத்திறனாளிகள் தகுந்த அடையாள அட்டையை கொண்டு வந்தால் அவர்களுக்கு தேவையான அரசாங்க உதவி மற்றும் உபகரண உதவிகள் செய்து தரப்படும். விபத்து மற்றும் ஆயுள்காப்பீட்டு திட்டம் போன்றவையும் செய்து தரப்படும்’ என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, ’மோடியின் 191 திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. தன்னார்வலர்கள் எங்களோடு இணைந்தால் பிரதமரின் திட்டங்களை 100 விழுக்காடு மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். அரசியலைத் தாண்டி பிரதமரின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம்.
கடந்த 26ஆம் தேதி 2 அமைப்புகள் வீதி நாடகம் நடத்தினர். அதில் பிரதமரை வெளிப்படுத்திக்காட்டிய விதம் கண்டிக்கத்தக்கது. இதனைக் கண்டித்து அமைதி வழியில் மேட்டுப்பாளையத்தில் பாஜக நடத்திய போராட்டத்தில் கல்வீச்சு, தடியடி போன்ற கலவரங்கள் நிகழ்ந்துள்ளன.
இதில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கலவரத்தை தூண்டிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய கோரிக்கை. கொடைக்கானலில் வேலூர் இப்ராஹிம் இந்து முஸ்லீம் ஒற்றுமையை பற்றிப் பேசியதில் என்ன தவறு உள்ளது? என்னை பொருத்தவரை யாரோ திட்டமிட்டு தேர்தல் களத்தில் வன்முறையை தூண்டி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்; அதன் வெளிப்பாடே கொடைக்கானல் சம்பவம்’ என்று கூறினார்.
இதையும் படிங்க: நபிகள் நாயகம் குறித்து இழிவு பேச்சு - பாஜகவினர் இஸ்லாமியக் கட்சிகள் இடையே கைகலப்பு!