கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், " முதலமைச்சரின் உத்தரவின்படி கோவை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் வார்டு துவங்கப்பட்டுள்ளது. இனிமேல் கோவையிலும் பிளாஸ்மா வங்கி சிறப்பாகச் செயல்பட்டு மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
கோவையைப் பொருத்தவரை இன்றுவரை 8,532 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கோவையில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் விழுக்காடு 78 ஆக உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 706 மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.
கோவையைப் பொருத்தவரை ஒரு நாளைக்கு நூறு பரிசோதனை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நேரடியாக மக்களை சென்று பரிசோதனை மேற்கொள்ளும் சென்னை பரிசோதனை முகாம்களை போன்று கோவையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவையில் வைரஸ் தொற்று உள்ளவர்கள் கண்டறிவது சுலபமாக்கப்படும் என்று நம்பிக்கை உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவையைப் பொருத்தவரை 5,600-க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் இதனை மேலும் அதிகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்கள் கட்டாயமாக பின்பற்றவேண்டும். வைரஸ் தொற்றின் ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைக்கு வந்தால் குணப்படுத்தும் அனைத்து வசதிகளும் மருத்துவமனைகளில் உள்ளது. இந்தியாவிலேயே ஆர்டிபிசிஆர் டெஸ்ட் செய்யும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்.
இ-பாஸ் தளர்வு என்பது சுகாதாரத் துறைக்கு மிகவும் சவாலான ஒன்று. இ- பாஸ் தளர்வு அறிவித்தாலும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் கடைசி நேரத்தில் நோயாளிகளை கவனிக்காமல் சென்றால் அந்த தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்புவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 25 சித்தமருத்துவ மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இறப்பு விகிதத்தை தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: அதிமுக முதலமைச்சர் வேட்பாளர்: தலைமை கூறுவதை ஏற்போம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!