கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் வரும் 25ஆம் தேதி, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று(டிச.23) அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான பணிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "இலவச திட்டங்களுக்கு எதிராக சிலர் உச்ச நீதிமன்றம் வரை செல்கின்றனர். அதே கட்சிகள் தேர்தல் வரும்போது இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக கொடுத்து வாக்காளர்களை சந்திக்கும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
நீதிமன்றங்களில் ஒரு கருத்து, தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கும்போது திட்டங்களை அறிவிப்பதில் ஒரு கருத்து என வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட அரசியல் இயக்கங்கள் இருக்கின்றன. குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இலவசப் பேருந்து திட்டத்தால் மகளிர் பலர் பயனடைந்துள்ளனர். மகளிர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் உன்னதமான திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்" என்று கூறினார்.
அப்போது, வரும் 31ஆம் தேதிக்குள் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்கவில்லை எனில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற தகவல் பரவி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், "சிலருக்கு அவதூறு பரப்ப வேண்டும். ஆனால், அவதூறு கருத்துக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. நல்ல முயற்சி என்பதால் நீதிமன்றமே ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட்டுள்ளது. வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் உள்ளது. இதுவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர்.
வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பிறகு மொத்தம் எத்தனை பேர் இணைத்துள்ளனர் என்ற கணக்கீடு வந்ததும், முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று அடுத்தகட்ட அறிவிப்பு வெளியிடப்படும்.
வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதாரை இணைக்காவிட்டால் இலவச மின்சாரம் ரத்தாகும் என சில அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருவதாகவும், அதனை மக்கள் நம்ப வேண்டாம்" என்றார்.
இதையும் படிங்க: ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசார் மீதும் நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை