கோயம்புத்தூர்: பேரூர் பகுதியில் பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் நொய்யல் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் விழா பேருரை ஆற்றிய அமைச்சர், "நாட்டு நலன் மீது அக்கறை கொண்ட ஆதீனம் பேரூர் ஆதீனம் என்றால் அது மிகையாகாது.மடங்கள் என்பவை சமய பணியோடு நின்று விடாமல் சமுதாயப் பணிகள் மேற்கொள்கின்ற உதாரண திகழ்கின்றன.தண்ணீர் என்பது மனிதனின் உயிரோடு கலந்த ஒன்று, நீரின்றி அமையாது உலகு என்ற மாணிக்க வரிகளுக்கு ஏற்ப நதிநீரைக் காப்பாற்ற புறப்பட்டிருக்கும் பேரூர் ஆதீனத்தின் பணி சிறப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மடங்கள் வெறும் வழிபாடு நடத்துகின்ற இடங்களோடு மட்டும் அல்லாமல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பாதுகாக்கின்ற இடமாக விளங்குகின்றன. இறைவன் இயற்கை மயமானவர் என்பதால் இயற்கையை சார்ந்த பாதுகாப்புகளில் ஆதீனங்களின் சேவையில் இந்த நொய்யல் நீர் நதி பாதுகாப்பும் ஒன்றாக அமைந்துள்ளது. அகழி, ஆறு, ஊற்று, ஏறி, நீரோடை என பல வடிவத்தில் ஓடும் நீர் நிலைகளை பாதுகாப்பது நமது ஒவ்வொருவருடைய கடமை, இயற்கையை மனிதன் காப்பாற்றினால் இயற்கை வளங்கள் மனிதனை காப்பாற்றும் இது ஒரு உலகப் பொதுமறை நியதி . நொய்யல் ஆற்றின் மேம்பாட்டை ஆதீனங்கள் பலரும் இணைந்து உலக மக்களுக்கு உணர்த்துகின்ற நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்துள்ளது என தெரிவித்தார்.
பின்னர் இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர், மலைக்கோவில்களில் வயது முதிர்ந்தோர்கள் உடல் நலத் தோய்வு இருப்பவர்களுக்கு உதவியாக இருக்க ரோப் கார்கள் தானியங்கி மின்தூக்கிகள் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருந்ததன் படி சுவாமி மலையில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் லிப்ட் அமைக்கின்ற பணிக்கு சாத்தியை கூறுகள் ஆராயப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. இது போன்று மலை சார்ந்து இருக்கின்ற பகுதிகளில் உள்ள கோவில்களில் பக்தர்களின் இறை தரிசனத்திற்காக ரோப் கார்கள் அமைப்பது லிப்ட் அமைப்பது என்று திராவிட மாடல் ஆட்சியின் ஒரு பங்களிப்பாக இந்து சமய அறநிலையத்துறை முன்னெடுத்துள்ளது.
சமயங்கள் என்பது ஏதோ சன்னிதானங்களை சார்ந்தது என்று மட்டுமல்லாமல் சமூகத்தை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் சமூக நல்லிணக்கத்திற்காக நொய்யல் பெருவிழாவை ஒரு வார காலத்திற்காக பேரூர் ஆதீனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை துறையின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழில் குடமுழுக்கு என்றாலும் சரி அன்னை தமிழில் அர்ச்சனை என்றாலும் சரி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றாலும் சரி ஒரு சமூக நீதிப் புரட்சிக்கு அடித்தளமாக இருக்கின்ற பல்வேறு கொள்கைகள் காரணங்களுக்கு கட்டுக்கோப்போடு எங்களது கரங்களை உயர்த்திப் பிடிக்கின்ற சாமிகளின் அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
நீரின்றி அமையாது உலகு என்ற மாணிக்க வரிகளுக்கு ஏற்ப நதிகளை பாதுகாக்கின்ற அவரது இம்முயற்சிக்கு தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் என்னாலும் அவரது கரத்தை நாங்கள் பிடித்திருப்போம். அவருடைய இம்முயற்சிக்கு அனைத்து விதத்திலும் அரசு ஒத்துழைப்பு நல்கும்" என தெருவித்தார்.
முன்னதாக, பெரிய தடாகம் பகுதியில் அமைந்துள்ள அனுவாவி சுப்பிரமணியசுவாமி மலைக்கோவிலில் ரோப்கார் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட, அமைச்சர் 13 கோடி மதிப்பீட்டில் 460 மீட்டர் உயரத்திற்கு ரோப் கார் அமைக்கும் பணிகள் துவங்கும் என தெரிவித்தார். மேலும் அனுவாவி கோவிலுக்கு மனைவியுடன் சென்றிருந்த அமைச்சர் சாமி தரிசனம் செய்தார்.இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மற்றும் கோவில் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:Thirumavalavan: சிறுபான்மையினர் மீது வெறுப்பு அரசியலை விதைக்கிறது பாஜக :திருமாவளவன் குற்றசாட்டு !