கோவை: கோவை மாவட்டத்தில் 'நம்ம ஊர் பள்ளி' என்ற கருத்தரங்கம் உள்ளிட்டப் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென கோவை தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளி வளாகத்திற்கு வந்த அமைச்சர் அங்கு பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் வருகை குறித்து கேட்டு அறிந்தார். மேலும் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவரைப் புத்தகம் வாசிக்க வைத்தார். மேலும், பள்ளியில் உள்ள குடிநீர் வசதி, கழிவறைகளைப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கூறியதாவது, "இந்தப் பள்ளியில் பழைய ஓட்டுக் கட்டடங்கள் உள்ளன. அவை நல்ல நிலையில் இருந்தாலும்கூட, அதன் மேல் கூரையை இடித்துவிட்டு தரமான கான்கிரீட் மேற்கூரையாகக் கட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும்.
சத்துணவு கூடத்தைப் பொறுத்தவரையில் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்து உள்ளனர். ஆனால் அங்கு மின்சார வசதி செய்துதரக்கோரி அங்கு பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர் மற்றும் பணியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து கல்வி அலுவலர்களிடம் தெரிவித்து மின்சார வசதி செய்து தரப்படும்.
மேலும், இப்பகுதியில் போக்குவரத்து வசதி குறைவாக உள்ளதாகவும், போக்குவரத்து வசதி இருந்தால் இன்னும் மாணவர்கள் கூடுதலாகப் பள்ளிக்கு வருவார்கள் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த கோரிக்கையையும் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துக் கூடுதல் போக்குவரத்து வசதி செய்து தரப்படும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த பள்ளியில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் நேரடியாகப் பேசி பழகினேன். அவர்களுக்கும் இங்குச் சிறப்பாகக் கல்வி கற்பித்து வருகிறார்கள். மேலும் பள்ளிகளுக்கு வர முடியாத வீட்டில் இருந்து படிக்கக்கூடிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் நேரடியாகச் சென்று கல்வி கற்றுத் தரப்படுகிறது எனக் கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.
மேலும், "இப்பள்ளியில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 97 சதவீதம் உள்ளது. அதை மேலும் இந்த ஆண்டு 100 சதவீதமாக உயர்த்த வேண்டும்" என்று ஆசிரியர்களிடம் தெரிவித்ததாகக் கூறினார். அதே சமயம் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளச் செல்லும் போது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைப் பள்ளிக்கு வெளியிலேயே இருக்கச் சொல்லி விட்டு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்விற்குச் சென்றார்.
மேலும், இவ்வூர் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!