பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் ரவுண்டனா சாலை ஓரத்தில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் மரத்தை சுற்றி வண்ணத்துணிகள் கட்டி சிவலிங்கம், நந்தி வைத்து வழிபட்டனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் கடந்த இரண்டு மாதங்களாக மரத்தில் பால் வடிவதாகவும், தற்போது அதிக அளவில் மரத்தில் பால் வருவதாக அவர்கள் தெரிவித்தனர். வேப்பமரத்தில் பால் வடிவதற்கு காரணம் அம்மன் அருள் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும், மரத்திலிருந்து வடியும் பாலில் மூன்று வகையான சுவை உள்ளதாக கூறினர். இதனால் அந்த பகுதி பெண்கள் சூடம் பற்ற வைத்தும் மரத்தை கடவுளாக நினைத்து வழிபட தொடங்கிவிட்டனர்.
வேப்ப மரத்தில் பால் - அறிவியல் சொல்வது என்ன?
இயல்பாகவே வேப்பமரத்தில் உள்ள மாவுச் சத்தை வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். அப்போது, நீர்நிலைகள் அருகிலுள்ள உள்ள வேப்ப மரங்களில் உள்ள நீர் அளவு அதிகமாகி, மரப்பட்டையின் அடியில் உள்ள திசு பாதிக்கும்.
இதுவே மரத்திலுள்ள மாவுச்சத்து பட்டை வழியே பிளந்து கொண்டு பால் போல் கசியும். இதையே பொதுமக்கள் பால் வடிகிறது என்கிறார்கள். பொதுவாக நீர்நிலைகளின் அருகிலிருக்கும் வேப்ப மரங்களில் மட்டுமே இது போன்ற பால் வடியும், வறண்ட நிலத்திலுள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதில்லை என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: செவ்வாயில் ஜீவராசிகள்.. அமெரிக்க விஞ்ஞானி நம்பிக்கை..!