கோவையில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் குளக்கரைகள் அழகுபடுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்பட்டது.
தற்போது ஊரடங்கு காரணமாக அந்தக் குளக்கரைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய் செலவில் அழகு செய்யப்பட்ட இந்தக் குளக்கரையில் தற்போது கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் குளங்களில் உள்ள மீன்கள் இறந்து மிதக்கின்றன.
வாலாங்குளம் குளக்கரையில் உயிரிழந்து மிதக்கும் மீன்கள் கோவை உக்கடம் பெரியகுளம் குளக்கரை பகுதியில் மருத்துவ ஊசிகள், மருந்துகள் போன்ற மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இது குறித்து அவ்வழியில் சென்ற பொதுமக்கள் உக்கடம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதேசமயம் வாலாங்குளம் குளக்கரையில் நூற்றுக்கணக்கான மீன்கள் உயிரிழந்து குளத்தின் ஓரம் மிதந்து கிடப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருகிறது.
பல கோடி ரூபாய் செலவில் சீர் செய்யப்பட்டுவரும் குளக்கரைகளில் இதுபோன்ற மருத்துவக் கழிவுகள் கொட்டிக் கிடப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இதற்கு மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.