கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள க. ராயர்பாளையம் என்ற இடத்தில் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு ஏடிஎம் மையம் உள்ளது. ஆகஸ்ட் 29ஆம் தேதி வங்கி பணிகளை முடித்துவிட்டு அதன் ஊழியர்கள் வழக்கம்போல் வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 30) அதிகாலை 2.30 மணி அளவில் வங்கியை ஒட்டி அமைந்துள்ள ஏடிஎம் மையத்திற்குள் சென்ற அடையாளம் தெரியாத ஒருவர், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டித்துவிட்டு ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முயன்றார்.
கண்காணிப்பு கேமரா இணைப்பு துண்டிக்கப்பட்டதால் எச்சரிக்கை ஒலி ஹைதராபாத்தில் உள்ள வங்கி ஊழியர்களுக்கு சென்றுள்ளது. உடனே அவர்கள் ஒலிபெருக்கி மூலம் கொள்ளை அடிக்க வந்த நபரை எச்சரிக்கை செய்தனர்.
பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடினார். இது குறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், ஏடிஎம்மில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையடிக்க வந்த நபர் குறித்து, தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வங்கிக் கொள்ளை: 500 சவரன் நகைகள், ரூ.18 லட்சம் திருட்டு