கோயம்புத்தூர்: அன்னூரை அடுத்துள்ள கரியாம்பாளையம் மசக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண்ணை அவரது தூரத்து உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதான சண்முக சுந்தரம் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
தனது விருப்பத்தை சண்முக சுந்தரம் அப்பெண்ணிடம் கூறியதற்கு தனது பெற்றோரிடம் வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார். பெற்றோரும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 18) அப்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அவர், தனது காரில் வந்து பெண்ணை வழிமறித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, பொன்னேகவுண்டன் புதூர் பகுதியில் உள்ள கோயிலில் வைத்து கட்டாய திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
அவரிடம் இருந்து தப்பிய இளம்பெண் அன்னூர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அன்னூர் காவல் துறையினர், சண்முக சுந்தரத்தையும் அவரது நண்பரையும் கைது செய்தனர்.
காவல் துறையினரின் தீவிர விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மை என தெரியவரவே அவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம் பெண்ணை காரில் கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட காதல் ஜோடி