கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்துள்ள சின்னாம்பதி, நவக்கரை ஆகிய கிராமங்கள் தமிழ்நாடு-கேரள எல்லையில் அமைந்துள்ளன. வனப்பகுதியான இங்கு ஏராளமான யானைகள் வாளையாறு ஆற்றில் நீர் அருந்துவதற்காக வருவது வழக்கம். அவ்வாறு வரும் யானைகள் இரண்டு ரயில்வே தண்டவாளங்களைக் கடந்து நீர் அருந்த செல்லும்.
அதபோல, இன்று அதிகாலை 1.30 மணி அளவில் யானைக் கூட்டம் ஒன்று ஆற்றில் நீர் அருந்த வந்துள்ளது. அப்போது, அந்த வழியாக வந்த திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயில் ஆண் காட்டு யானை ஒன்றின் மீது மோதியது.
இதில், தலை மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயமடைந்த யானை அங்கேயே படுத்துள்ளது. இதுகுறித்து ரயில் ஓட்டுநர் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் மதுக்கடை வனச்சரகர் சீனிவாசன் அடங்கிய வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று யானையின் உடல் நிலை குறித்து கண்டறிந்தனர்.
இதனையடுத்து கால்நடை மருத்துவக் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மருத்துவர்கள் காயம்பட்ட யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். காயம்பட்ட யானைக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கலாமா? அல்லது மாற்று இடத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கலாமா? என வனத்துறை அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
வனத்துறையின் முதல்கட்ட விசாரணையில், காயம்பட்ட யானைக்கு சுமார் 28 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியில் இயக்கப்படும் ரயில்களை மெதுவாக இரயக்க வேண்டும் என தொடர்ச்சியாக அறிவுறுத்தியும் ரயில் ஓட்டுநர்கள் அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால் வனவிலங்குகள் தொடர்ச்சியாக காயமடைவதும், உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் ரயில்வே உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து ரயில்களை மெதுவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.