சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் மயில்சாமிக்கு ஆதரவாக சூலூரில் நேற்று பரப்புரைக் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது,
"சாராய கங்கை பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், நாட்டில் ஜீவ நதிகளை காப்பதற்கு அரசு தவறி விட்டது. வழக்கமான அரசியல் கட்சிகள் போல் இல்லாமல, எங்களுக்கு செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறது. தமிழகத்தில் உள்ள குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க முடியாமல் இல்லை. நேர்மையான அரசியல் செய்தால் குடிநீர் வீடு தேடி வரச் செய்ய முடியும். ஒருவர் குழியை தோண்டுகிறார். அதனை ஒருவர் மூடுகிறார். இப்படி மேடு பள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதை சரிப்படுத்த வேண்டிய நேரம் இது.
மூன்று துறைகள் ஒன்று சேர்ந்து செய்யாத வேலையால், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. வாக்குச்சாவடி மையத்தில் இருந்து எத்தனை பெட்டிகள் எடுத்துச் சென்றாலும் மக்கள் நீதி மையம் வெல்லும் என்கிற நம்பிக்கை உள்ளது. தைரியமாக மாற்றத்திற்கான விதையை தூவுங்கள். தமிழ்நாட்டில் மெதுவாக மதுவிலக்கை அமல்படுத்துவதே எங்கள் வேலை. விண்வெளி ஆனாலும் விவசாயம் ஆனாலும் பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம்", என்றார்.