கோவை: ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமையிடமாக கொண்ட லுலு நிறுவனம் தமிழகத்தில் முதன் முதலாக தனது வணிகத்தை கோவையில் துவங்கியது. இந்தியாவில் திருவனந்தபுரம், கொச்சின், பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் லுலு மால் செயல்படுகிறது.
இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, லுலு நிறுவனம் தமிழகத்தில் 3,500 கோடி முதலீட்டை செய்வதற்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் லுலு ஹைப்பர் மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் கோவையில் லுலு ஹைப்பர் மார்க்கெட் அமைப்பதற்கான பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில் கோவை அவிநாசி சாலையில் லட்சுமி மில்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்ட லுலு மாலை தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று திறந்துவைத்தார். 1.32 லட்சம் சதுர அடியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மாலில் பிற்பகல் முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய லூலு நிறுவனத்தின் உரிமையாளர் யூசூப் அலி, "தமிழக அரசுடன் ரூபாய் 3500 கோடிக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையின் முதல் நடவடிக்கையாக இந்த ஹைப்பர் மார்க்கெட் துவங்கப்பட்டுள்ளதாகவும், இதில் எங்களுடைய சொந்த நிறுவன பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுயுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மாலில் புதிய 300 தேசிய மற்றும் சர்வதேச பிராண்டுகள், குழந்தைகளுக்கென பொழுதுபோக்கு மையமாக திகழும்" என்றார்.
ஹைப்பர் மார்க்கெட்டில் வசதிகள்:
மேலும், "மிகச்சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை இந்த மார்க்கெட் தரும். தரைத்தளத்தில் மட்டுமே ஷாப்பிங் பகுதி இருக்கும். மளிகை, காய்கறி, பழங்கள், சைக்கிள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், பிட்னஸ், அழகுச் சாதனம், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், மெத்தை, வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள், எழுதுப்பொருட்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், புத்தக பைகள், லக்கேஜ் , கண் கண்ணாடி என, ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு தயாரிப்புகளையும் ஒரே இடத்தில் வாங்கலாம். காய்கறிகளை பொறுத்தவரை விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்கிறோம்" என தெரிவித்தார்.
மேலும், "ஒவ்வொரு பொருளிலும் உலகின் முன்னணி பிராண்ட்களின் வெவ்வேறு ரகங்கள், வேறெங்கும் இல்லாத அளவுக்கு இங்கு கிடைக்கும். உதாரணமாக ஆரஞ்சு பழம் எனில் உள்நாடு, வெளிநாடு குறைந்தது ஆறு ரகங்கள் இங்கே கிடைக்கும். பில் போடுவதற்காக காத்திருக்கத் தேவையில்லை 28 கவுண்ட்டர்கள் உள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய லுலு ஹைப்பர் மார்க்கெட் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைய உள்ளது. லுலு குழுமம் முக்கியமாக மத்திய கிழக்கு, ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா என 23 நாடுகளில் செயல்படுகிறது" யூசூப் அலி தெரிவித்தார்.
இதையும் படிங்க:விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன ஐ லியோனி!