கோயம்புத்தூர்: சூலூரில் இருந்து மும்பைக்கு நூல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, சோமனூர் ரயில்வே மேம்பாலத்தில் இன்று அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் உயிர் சேதம் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. மேலும் பாலத்தில் லாரி கவிழ்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சூலூர் போலீசார், விபத்து குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை செய்தனர். அதில், லாரி ஓட்டியவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கௌதம்(23) என்பது தெரிய வந்தது.
மேலும் லாரியை ஓட்டி வந்தபோது சாலையின் குறுக்கே உள்ள டிவைடரை சரியாக பார்க்காமல் வந்து டிவைடர் அருகில் வந்ததும் பிரேக் பிடித்ததால் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பொக்லைன் உதவியுடன் அப்புறப்படுத்தி பின்பு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த 20 யானைகள்.. கிருஷ்ணகிரி வனத்துறை எச்சரிக்கை