டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் வெளிவரும் நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், கோவையில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்கள் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. பலரும் பணம்செலுத்தி விருப்பமனுக்களைப் பெற்றுவருகின்றனர். இதில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துக்கொண்டு விருப்பமனுக்கள் விநியோகத்தை தொடங்கிவைத்தார்.
விருப்ப மனுக்களை பொறுத்தவரை மேயருக்கு ரூ. 25 ஆயிரம், மாநகராட்சி மாமன்ற உறுப்பினருக்கு ரூ. 5 ஆயிரம், நகர மன்றத் தலைவருக்கு ரூ.10ஆயிரம் என்ற வீதம் விருப்பமனுக்கள் விநியோகிக்கப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்றதுபோலவே உள்ளாட்சி தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார். வெற்றிடத்தை எல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பூர்த்தி செய்துவிட்டார். 50 ஆண்டு காலம் இல்லாத வளர்ச்சியை இந்த ஆட்சி செய்துள்ளதால் உள்ளாட்சியில் வெற்றி நிச்சயம் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிமுக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள்!