கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரராஜன் மதுவிலக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் உத்தரவின்பேரில், சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றன.
இதன்படி, பொள்ளாச்சி மதுவிலக்கு ஆய்வாளர் பாலமுருகன் உதவி ஆய்வாளர் சின்னகாமனன் மற்றும் போலீசார் மார்க்கெட் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, 25 பெட்டிகளில் ஆயிரத்து இருநூறு மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து நாற்பதாயிரம்.
இதையடுத்து, காரை ஓட்டி வந்த ஹரிஷ் குமார் என்பவரிடம் நடத்திய விசாரணையில், தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று மதுக்கடைகள் விடுமுறை என்பதால் கூடுதல் விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்கள் வாங்கி வந்தது தெரியவந்தது.
அதையடுத்து, மதுபாட்டில்கள் கடத்தி வந்த காரை பறிமுதல் செய்த காவல் துறை, ஹரிஷ்குமாரை கைது செய்தனர். மேலும் மது பாட்டில்கள் கோயம்புத்தூரில் உள்ள கலால் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆய்வு மேற்கொண்ட பின் மறு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் என மதுவிலக்கு காவல் துறையினர் தெரிவித்தனர்.