கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உள்பட்ட மதுக்கரை ஐயப்பன் கோயில் தெரு, விநாயகர் கோயில் தெரு, அய்யம்பதி, காந்தி நகர் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி சிறுத்தை ஒன்று புகுந்து கோழி, ஆடுகள் மற்றும் கன்று குட்டிகளை வேட்டையாடிவந்தது. அச்சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடித்து செல்ல வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கைவைத்தனர்.
இதையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க கடந்த 21ஆம் தேதி காந்திநகர் மற்றும் மட்டப்பரை பகுதிகளில் கூண்டு வைக்கப்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் காந்திநகரில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. இது தொடர்பாக வனத்துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அறிவுரையின் பேரில் பிடிபட்ட சிறுத்தையை வனத்துறை மருத்துவர் சுகுமார் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் பிடிபட்டது ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அந்தச் சிறுத்தை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தெங்குமரஹடா வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. சிறுத்தை பிடிபட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:10 ஆண்டுகளாக பறவைகளுக்கு உணவிடும் தம்பதி!