வால்பாறை மாணிக்கா எஸ்டேட் பகுதியில் ஓய்வுபெற்ற பணியாளர் மாடசாமி வசித்துவருகிறார். இவருடைய மாட்டை நிறுவனத்திற்குச் சொந்தமான மாட்டுப்பட்டியில் நேற்று மாலை கட்டிவிட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார்.
நள்ளிரவு 2 மணி அளவில் அப்பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று மாட்டைக் கடித்துக் கொன்றுள்ளது. இதனையடுத்து காலை 6 மணி அளவில் மாட்டின் உரிமையாளர் வந்துபார்த்தபோது மாடு இறந்துகிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக எஸ்டேட் நிர்வாகத்திற்கும் வனத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த வனத் துறையினர் மாட்டின் உடலைக் கைப்பற்றி பரிசோதனை மேற்கொண்டனர். அதன்பின் அப்பகுதியில் மண்ணைத் தோண்டி மாடு புதைக்கப்பட்டது.
கடந்த வாரம் அதே பகுதியைச் சேர்ந்த வாசுகி என்பவருடைய மாட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். அங்கு சுற்றித் திரியும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு: திருமலையில் சுற்றித்திரியும் வனவிலங்குகள்!